சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் தமிழக காவல்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், மதுரை உயர்நீதி மன்றமும், காவல்துறையை கடுமையாக சாடி உள்ளது. தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழி தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பியிருந்தார். அதன் எதிரொலியாக,  தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும்,  தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, கோவில்பட்டி சிறை கண்காணிப்பாளர் ஆகியோரும் விளக்கமளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.