சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பிக்க ஆளுங்கட்சி உடந்தை?

சாத்தான்குளம்:

காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த தந்தை மகன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் தப்பிக்க ஆளும்கட்சி உதவி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கின் போது கூடுதலாக செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக்கூறி போலீஸா ரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் படு காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை தலையிட்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தது.  இதையடுத்து சிபிசிஐடி களத்தில் குதித்தது. 12 குழுக்களாக பிரிந்து, நேரடியாக சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டி சிறைச்சாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டது. மற்றொருபுறம் தடயவியல் சோதனையும் நடைபெற்றது.

இதில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் அடிப்படையில், தந்தை மகன் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்ட நிலையில், அன்று இரவே எஸ்ஐ  ரகு கணேஷ், கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் வழக்கில் தொடர்புள்ள , உதவி காவல் ஆய்வாளர் பால கிருஷ்ணன், மற்றும் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இந்த நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அவர் மாவட்டத்தை விட்டு தப்பிவிடாதபடி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  சாத்தான் குளம் ஆய்வாளராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஸ்ரீதர் கங்கை கொண்டான் வழியாக காரில் தப்பிச் சென்றபோது, சிபிசிஐடி போலீஸார் இடை மறித்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் ஸ்ரீதருக்கு அதிமுக மேலிடம் ஆதரவு அளித்ததாக பிரபல ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதர், உள்ளூர் அதிமுக நிர்வாகிகளின்  ஆதரவுடன் தேனிக்கு தப்பிச்செல்ல முயன்றதாகவும், ஆனால்,  சிபிசிஐடி காவல்துறையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், கங்கைகொண்டான் சோதனைச்சாவடி அருகே அவரை மடக்கியதாக கூறப்படுகிறது.

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் உதவி  செய்து வந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கிளை சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவமானது, அமெரிக்காவில் உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டுடன் ஒப்பிட்டு பேசப்பட்டது. சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

ஏற்கனவே இந்த கொலை விவகாரம் பூதாரகமாக மக்கள் போராட்டமாக மாறிய நிலையில், சாத்தான் வருகை தந்து, ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “இந்த உயிரிழப்பு லாக்-அப் மரணம் கிடையாது“ என்றும் , “சாத்தான்குளம் விவகாரத்தில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்திலேயே தாக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்தால்தான் லாக்-அப் மரணம் என்று பெயர் என்று காவல்துறையினருக்கு ஆதரவாக கூறியது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல ஆய்வாளர் ஸ்ரீதர், தேனிக்கு தப்பிச்செல்ல முயன்றபோதுதான் நெல்லை மாவட் டம் கங்கைகொண்டானில் கைது செய்யப்பட்டார்.  ஸ்ரீதர் தேனிக்கு செல்ல வேண்டிய கார ணம் என்ன என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட வருகிறது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழக அமைச்சரவையில்  முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு அவர் ஆதரவு அளிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதனால், சாத்தான்குளம் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரை கொடுமையாக தாக்கி உயிர்களை குடித்துள்ள குற்றவாளிகளான கொடூர மனம் கொண்ட போலீசாருக்கு அதிமுக தலைமை துணைபோகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி