நெல்லை:
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தில் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறியதாக போலீசார் கைது செய்து தாக்கியதுடன், கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். எனவே, போலீசாரை கண்டித்து சாத்தான்குளத்தில் பொதுமக்கள் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின், வைகோ, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற அனுமதியுடன் சிபிஐக்கு மாற்றப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி யின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில்,  தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில் காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை. சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.