மதுரை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் கொலையான விவகாரத்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள  இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விசாரணைக்கு அழைத்துச்சென்ற  சாத்தான்குளம் வணிகர்களான  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் (தந்தை -மகன்)   காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில், சாத்தான்குளத்தில் அப்போது பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில்,  காவலர் பால்துரை கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தார்.

சிறையில் உள்ள மற்ற எகாவலர்கள் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த  இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாரதிதாசன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.