திருச்செந்தூர்:
சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு தந்தை மகன் இறந்த விவகாரத்தில், அவர்களை எந்தவித சோதனையும் செய்யாமல், சிறையில் அடைக்க, பொய்யான  தகுதிச் சான்றிதழ் கொடுத்த சாத்தான்குளம் அரசு மருத்துவர் தலைமறைவான நிலையில், இன்று மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது  சாத்தான்குளம்  தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம். இந்த விவகாரத்தில், விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட  தந்தை மகன் இருவரும், காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு, அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர்.
இந்த விவகாரத்தில், தந்தை மகன் ஆகியோரின் உடல்நிலை குறித்து எந்தவித ஆய்வும் செய்யாமல், அவர்கள் உடல்நிலை நன்றாக இருப்பதாக பொய் சர்டிபிகேட் கொடுத்தது தெரிய வந்தது.  ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல்தகுதி சான்று அளித்தது சாத்தான்குள அரசு மருத்துவர் வெண்ணிலா.
இந்த விவகாரம் வெளியே வந்த நிலையில், மருத்துவர் 15 நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு தலைமறைவானார். மதுரை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்பேரில், திருச்செந்தூர் விருந்தினர் மாளிகையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மாஜிஸ்திரே பாரதி தாசன் முன்பு இன்று  மருத்துவர் வெண்ணிலா  விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவர் வெண்ணிலா அளித்த சான்றிதழ் அடிப்படையிலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறைக்கு அனுப்பபட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.