சாத்தான்குளம் சம்பவம்: பொய் சர்டிபிகேட் கொடுத்த அரசு பெண் மருத்துவர் எஸ்கேப்…

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறைக்கு ஆதரவாக பொய்யான சட்டிபிகேட் கொடுத்த சாத்தான்குளம் அரசு மருத்துவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் 15 நாட்கள் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தமிழக சுகாதாரத் துறை இணை இயக்குநர் பொன் இசக்கி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை மகனான  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில்  உயிரிழந்தனர்.

இந்த  சம்பவம் நாடு  முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்பட உச்சநீதி மன்ற வழக்கறிஞர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள உயர்நீதி மன்றம் மதுரை கிளை கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. சாத்தான்குளம் காவல்நிலையம் முழுவதும் ஆட்சியர் கட்டுப்பாட்டுக்கொண்டு வரப்பட்டு, பொறுப்பாளராக தாசில்தார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில், சாத்தான்குளம் காவல்துறையினருக்கு ஆதரவாக மாவட்ட அரசு மருத்துவர் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.  எந்தவொரு விசாரணைக் கைதியும் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் உடற்தகுதி சோதனை நடத்தப்படுவது வழக்கம். அது போல் ஜெயராஜும், பென்னிக்ஸும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைப்பதற்கு முன்னர் உடற்தகுதி சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்கலாம் என சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா உடற்தகுதி சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிலையில்தான்,   அவர்கள் இருவரும் அடுத்தடுத்து சிறையில் மரணமடைந்தனர்.  இருவரின் பிரேதப் பரிசோதனையில் அதிக காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல்தகுதி சான்று அளித்த  அரசு மருத்துவர் வெண்ணிலா தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்,  தற்போது 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் பொன் இசக்கி தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி