மதுரை:
காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டு தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது மேலும் 5 பேரை விசாரணைக்கு எடுக்க முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கு தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் 10க்கும் மேற்பட்ட காவலர்களை கைது செய்ததுடன், ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றியது.
அதைத்தொடர்ந்து,  முதல்கட்டமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிவடைந்த நிலையில், அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், மேலும் 5 காவலர்களை, சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வரும் திங்கள் கிழமை மதுரை நீதிமன்றத்தில்  சிபிஐ மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எஸ்.எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளது .
இந்த நிலையில், தந்தை மகன் உயிரிழந்தது  தொடர்பாக, தங்களிடம்  மீதமுள்ள புகைப்படங்கள், தடயங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சிபிஐயிடம், சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் ஒப்படைக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.