மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதி மன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கி உள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், காவல் துறையினரின் தாக்குதல் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் முதல்கட்டமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ள நிலையில், காவலர்களை 5 நாள்  காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி நிதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.
நேற்று நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து,  குற்றம்சாட்டப்பட்ட 5 காவலர்களையும் நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று  மதுரை மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில்  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள்  ரகு  கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர்  நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது. அப்போது, 5 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோருவது ஏன்? என சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.
இதுதொடர்பாக 5 போலீசாரிடமும் நீதிபதி தனித்தனியே கேட்டறிந்தார். அப்போது, சிபிஐ விசாரணையின்போது, வழக்கறிஞர்கள் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என 5 போலீசாரும் கோரிக்கை வைத்து உள்ளனர்.
அதைத்தொடர்ந்து 3 நாள் சிபிஐ காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.