டெல்லி:
சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதி மன்றம் நாளை விசாரணை நடத்துகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை  சேர்ந்த வணிகர்களான  பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர், காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, காவல்துறையினரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலால் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். அதில், கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சரின் இந்த அறிக்கைக்கு திமுக உள்பட அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக எம்.பி. கனிமொழி, முதலமைச்சருக்கு சிறையில் உயிரிழந்த தந்தை,மகனின் இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது  என கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக  வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவரது வழக்கில், பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறியதால், முதல்வரையும் விசாரிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இவரது மனுமீதான விசாரணை நடைபெற உள்ளது.