சாத்தான்குளம் சம்பவம்: சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..

மதுரை:

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு,  சிறையிலிருக்கும் 5 காவல்துறை யினரை நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிசிஐடி முதலில் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்திருந்தது.

சிபிஐ அதிகாரிகள் விஜயகுமார் சுக்லா ஏடிஎஸ்பி தலைமையில் 3 அதிகாரிகள் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதி ஹேமானந்த் குமார், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 5 பேரையும் நாளை காலை 11 மணிக்கு நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.