சென்னை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக வட்டாட்சியர் செந்தூர்ராஜன்  நியமிக்கப்பட்டுஉள்ளார். அவரது கட்டுப்பாட்டுக்குள் காவல்நிலையம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபரிகளான தந்தை-மகன், காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய காவல் ஆய்வாளரும் அங்கு நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி விசாரணைக்கு சென்ற நீதிபதி மிரட்டப்பட்ட நிலையில், இந்த விவகாரம் மேலும் விசுவரூப மெடுத்தது.
இதையடுத்து, காவல்நிலைய ஆவணங்களை உடனே கைப்பற்ற உத்தரவிட்ட நீதிமன்றம், உடனே காவல்நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சாத்தான்குளம் காவலர் மகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும்  தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட தகவல் வெளியானது.
இதையடுத்து,   உயர்நீதி மன்றம் மதுரை கிளையின் உத்தரவின்படி,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி,  சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு,  வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் செந்தூர் ராஜனை நியமித்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, உடடினயாக செந்தில்ராஜன் பொறுப்பேற்றார். தற்போது சாத்தான்குளம் காவல்நிலையம் தாசில்தார் செந்தூர் ராஜன் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
உயர்நீதி மன்றம் மதுரை கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டும், தடயவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது.