Random image

சினிமா விமர்சனம் : சத்யா

“ எனக்கு நடிக்க வராது “ என்கிறார் சிபிராஜ்.

“ அது ஊருக்கே தெரியும் “ என்கிறார் யோகி பாபு.

தன்னைத் தானே சுய பகடி செய்து கொள்ள துணிந்து விட்ட ஒரு பக்குவமான ஹீரோவாக வந்து நின்றிருக்கிறார் சிபி.

அப்பா சத்யராஜின் செல்வாக்கில் எளிதாக ஹீரோ வாய்ப்பு கிடைத்திருந்தாலும் கூட ஒரு கட்டத்தில் ஃபீல்ட் அவுட்டாகி, பிறகு தன்னை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் சிபிராஜிக்கு கதையும் திரைக்கதையும் தான் அதைச் செய்யும் என்று புரிந்து கொள்வதற்கு இவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கின்றன. ’நாய்கள் ஜாக்கிரதை’க்குப் பிறகு கவனிக்க வைக்கும்படியான ஒரு ’ஹிட்’ ’சத்யா’.

பழைய ரஜினியின் படத்தலைப்புகளை வைக்கத்தான் போட்டி போடுவார்கள். இங்கு கமலின் பழைய படத் தலைப்பை வாங்கி வைத்திருக்கிறார்கள். காரணம் சத்யராஜ். அவருக்குத்தான் ரஜினியைப் பிடிக்காதே

கதை ஆஸ்திரேலியாவில் ஆரம்பிக்கிறது. வாழ்வில் எவ்வித பிடிப்புமற்று தனிமையில் தான் உண்டு தன் ஐடி வேலை உண்டு என்று அமைதியாக வாழ்ந்து வருகிறார் சிபி. அவருடைய நண்பன் யோகிபாபு ’ஏற்பாடு’ செய்து தரும் ’க்ரேஸி’ களைக் கூட தவிர்க்கிறார். காரணம் அவர் ஒரு காதல் தோல்வியாளர். (யோகி பாபுவை ஐடி ஊழியராகப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.)

ஒரு நாள் சிபியின் முன்னாள் காதலியான ரம்யாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. சிபியை உடனே பார்க்க வேண்டும் என்கிறாள் அவள். சிபியும் உடனே இந்தியா கிளம்பி வருகிறார்.  அவளுடைய நான்கு வயது குழந்தையை யாரோ கடத்தி விட்டார்கள் எனவும், கணவன் முதல் காவல் துறை வரை அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள் எனவும் அவள் சொல்லி அழுகிறாள். சிபியும் கடத்தப்பட்ட அந்த குழந்தையைத் தேடி பயணிக்கையில் அப்படி ஒரு குழந்தையே இல்லை என அவருக்கு தெரிய வருகிறது.

மேலும் விபத்தில் தலையில் அடிபட்ட ரம்யாவுக்கு மனப்பிறழ்வு உண்டாகி விட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள். சிபி அதை ரம்யாவிடம் சொல்ல, மனம் உடையும் ரம்யா தற்கொலை செய்து கொள்கிறார். இல்லாத குழந்தைக்கா ஒருவர் தற்கொலை செய்து கொள்வார் என்கிற கேள்வி சிபியை இறுக்குகிறது. பிறகு அந்த குழந்தைக் கடத்தலின் முடிச்சு ஒவ்வொன்றாக அவிழ்கிறது. அவிழ்க்கிறார். அந்த குழந்தையை யார் கடத்தியது எதற்காக கடத்தினார்கள் என்கிற கேள்விகளுக்கு விடை தெரியும் போது பார்வையாளர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் சிபிக்கே அது சர்ப்ரைசாக இருக்கிறது.

படம் கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

சிபி-ரம்யாவின் காதல் உடைவதற்குக் காரணம் ரம்யாவின் அப்பாவுக்கு வந்த கேன்சர்தான் என்பது மாதிரியான பலவீனமான பழமைகளைத் தவிர்த்திருந்தால் திரைக்கதை இன்னும் புதுசாகியிருக்கும்.

மற்றபடி இயக்குனருக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை. மூலப்படமான தெலுங்கு ’ஷணம்’ கிட்டத்தட்ட அப்படியே வந்திருக்கிறது. அதில் நடித்த சில நடிகர்கள், சில வசனங்கள் அவ்வளவு ஏன் சிபியின் ஜெர்க்கின், ரம்யாவின் தலையில் பட்ட காயத்தின் வடு உட்பட பலவற்றை அப்படியே இறக்குமதி செய்திருக்கிறார்கள். (சிபி ரம்யா காதல் பகுதிகளை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். சிபியை கல்லூரி மாணவனாகக் காட்ட முடியாதல்லவா?)

முன்பெல்லாம் இப்படியான ஜெராக்ஸ் வேலையை ஜெயம் ரவியின் அண்ணா ஜெயம் ராஜாதான் செய்து கொண்டிருந்தார். தெலுங்கு ஹீரோ, சட்டையின் மேல் பட்டனைக் கழற்றி விட்டிருந்தால் தமிழிலும் அதை அப்படியே செய்ய வைப்பார். அவர் மோகன் ராஜாவாக மாறிய பிறகு அதை விட்டு விட்டார். இப்போது இயக்குனர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி ஆரம்பித்திருக்கிறார். அவருடைய முந்தைய படமான ’சைத்தான்’ எழுத்தாளர் சுஜாதாவின் ’ஆ..’ என்கிற நாவல். இப்போது ’ஷணம்’

தவறில்லை. ஆனால், ஒரு படத்தை மறு ஆக்கம் செய்யும் போது அது மூல மொழியிலிருந்த தவறுகளைக் களைந்து இன்னும் அதனை மெறுகேற்றுவதாக இருக்க வேண்டும். உதாரணமாக தெலுங்கின் ’ஒக்கடு’ தமிழில் ’கில்லி’யாக மாறிய போது அந்த வேலையைச் செய்தது. அதற்கு காரணம் பொறுத்தமான நடிகர்கள்.

’சத்யா’வில் சிபிராஜ் வித விதமான ’விக்’குகள் வைத்து சமாளித்திருந்தாலும் இவர் இந்த கதைக்கு ஓரளவு பொறுத்தமாகத்தான் இருக்கிறார்.  ஆனால், மற்ற நடிகர்கள்? குறிப்பாக காமெடியன் சதீஷ், வரலட்சுமி, உள்ளிட்டவர்கள் அந்த பாத்திரத்திற்குப் பொறுந்தவில்லை. அதிலும் வரலட்சுமி தெலுங்கு பாத்திரம் அணிந்திருக்கும் அந்த கண்ணாடியைக் கூட விட வில்லை. பல காட்சிகளில் அவர் ஒரு மெல்லிய புன்னைக்காத புன்னகையுடனே இருக்கிறார். போலிஸ் அதிகாரியாக வரும் ஆனந்தராஜ் தனது அலட்டலான வசனங்கள் மூலம் கொஞ்சம் ஆறுதல்படுத்துகிறார்.

ஒரு குழந்தைக்கு அம்மா பாத்திரம் என்றால் ரம்யா நம்பீசன்தான் ஒத்துக் கொள்கிறார் போலிருக்கிறது. அதற்காக அவரை அவ்வளவு க்ளோஸ் அப்பில் காட்டி மிரள வைக்க வேண்டுமா?.

இது ஒர்ஜினல் தமிழ்ப் படமாக இருந்திருந்தால் குழந்தைக் கடத்தல்காரர்களாக வட சென்னை ஆட்களைத்தான் காட்டியிருப்பார்கள். தெலுங்கில் ஆப்பிரிக்கர்களைக் காட்டி விட்டதால் இதிலும் அப்படியே காட்டியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் மிக முக்கியமான அம்சம் இசை. படத்தின் திருப்பங்களுக்கேற்றவாறு சிறப்பான பின்னணி இசை அமைத்திருக்கிறார். சிமோன்.

சண்டைக் காட்சிகளைத் தவிர மற்ற இடங்களில் அருண்மணி பழனியின் படப்பதிவும் நன்றாகவே இருக்கிறது.

எடிட்டர் கவுதம் ரவிச்சந்திரன் நான் லீனியர் முறையிலான படத்தொகுப்பைக் கையாண்டு படத்தை மேலும் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்.

தனக்கென யாரும் இல்லாமல் வாழ்வில் எவ்வித பிடிப்புமற்று தனிமையில் வாழும் பாத்திரத்தை பார்வையாளனின் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் க்ளைமேக்ஸ் எமோஷன் சரியாகப் பொறுந்தியிருக்கும். காட்சிகள் எல்லாம் எதற்கு.. பெரிய தாடியே போதும் என்று நினைத்து விட்டிருக்கிறார்கள்.

படத்தின் இறுதிக் கட்டம் யாரும் எதிர் பார்க்காதது. கொஞ்சம் கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்குவதாகவும் இருக்கிறது. அந்த பகுதியை இன்னும் கொஞ்சம் நியாயப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கலாம். ஆனால் அது சவாலானது.

ஏனெனில் ரம்யாவின் கணவன் ’இம்பொடெண்ட்’ என்பது ரம்யாவுக்கு எப்போது தெரிந்தது. அதனால் தான் ’சரி இருக்கட்டும்’ என்று ’அதை’ அப்படியே விட்டுவிட்டாரா என்கிற சில ஓவர் லாஜிக் கேள்விகளைத் தவிர்த்து விடலாம்தான்.

ஆனால், இந்த இறுதிப் பகுதி சராசரி ஆண் மனதின் தொண்டையில் மாட்டிக் கொண்ட ஒரு மீனின் முள்ளாக உறுத்த வாய்ப்பிருக்கிறது.

கவனிக்கவும் சராசரி ஆண் மனதிற்கு.

  • அதீதன் திருவாசகம்