சென்னை:

ற்போது தர்பார் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் அடுத்து 2021ம் ஆண்டு வர உள்ள சட்டமன்ற தேர்தலில்  234 தொகுதிகளிலும் போட்டியிடுவார் என்று அவரது அண்ணன் சத்தியநாராயணா தெரிவித்து உள்ளார்.

தர்பார் படத்தை வெற்றிப்படமாக்கவே ரஜினி மீண்டும் அரசியல் அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறி அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்களையும் ஏமாற்றி வரும் ரஜினி, அவ்வப்போது மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அதேவேளையில் தனது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தையும் விட்டுவிடாமல், தொடர்ந்து படங்களிலும் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில், 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என்று ரசிகர்கள் முன்னிலையில் சொன்னார். பிறகு ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார். தொடர்ந்த  அரசியலை கிடப்பில் போட்டு விட்டு காலா, கபாலி என பல படங்களில் நடித்து, அதை ரசிகர்கள் உதவியுடன் வெற்றிப்படமாக மாற்றியவர், பின்னர் இமயமலை சென்று ஓய்வெடுத்தார்.

தற்போது தர்பார் படம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தனது ரசிகர்களை மீண்டும் உசுப்பேத்தும் வகையில், அரசியல் தொடர்பாக பேச தொடங்கி உள்ளார். தனது அரசியல் குறித்து, மே மாதம் 23-ம் தேதி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாகவும் சொல்லி இருக்கிறார்.

அன்றைய தினம் என்ன சொல்லப்போகிறார்… மத்தியில் பதவி ஏற்க போகும் ஆட்சிக்கு வாழ்த்து என கூறப்போகிறார்… 

தர்பார் படப்பிடிப்பில் ரஜினி….

இந்த நிலையில், பிள்ளையார்பட்டி வந்திருந்த  ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா செய்தி யாளர்களிடம் பேசும்போது,  ரஜினிக்கு “சட்டமன்றத் தேர்தல்தான்  இலக்கு. வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ரஜினி தனித்தே நிற்பார். நிச்சயம் வருவார் இந்த தேர்தல் அவருக்கு ஒரு அனுபவமாக இருக்கிறது. யார் யார் நிற்கிறார்கள். என்ன பேசுகிறார்கள். எங்கு போகிறார்கள் என்று கவனித்து வருகிறார். தேர்தல் முடிவுகள் வரட்டும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அதனால் நிச்சயமாக வருவார்” என்று கூறியுள்ளார்.

ஆனால், ரஜினியின் அரசியல் அறிவிப்பு, அவரது படத்தை ஓடவைக்கும் தந்திரம் என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடித்து வரும் தர்பார் படத்தை வெற்றிப்படமாக்கவே ரஜினியின் அரசியல் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.