சாத்தாவட்டம் ஆனந்தன் சாவு-பாமக அவதூறு! விடுதலைசிறுத்தைகள் அறிக்கை

சென்னை,

சாத்தாவட்டம் ஆனந்தன் என்ற இளைஞர் எரித்துக்கொள்ளப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிடவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடலூர்மாவட்டம், திருமுட்டம் ஒன்றியம், சாத்தாவட்டம் கிராமத்தைச் சார்ந்த ஆனந்தன் என்கிற இளைஞர் நேற்று (28-11-2017) காலமாகிவிட்டார். அவர் சிலநாட்களுக்கு முன்னர் தனது றவினர்கள் சிலரின் முன்னிலையிலேயே, அவர்கள் தடுத்தையும் மீறி, தனக்குத் தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.

இதனால் அவர் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடுகிற அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரது இறப்பானது வெளிப்படையாக நிகழ்ந்த ஒரு தற்கொலை தான் என்பது அக்கிராமத்தைச் சார்ந்த அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரின் தற்கொலையையும் பா.ம.க தமது அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முயற்சிப்பது, திசை திருப்புவது, மிகவும் ஆபத்தான, அநாகரிகமான போக்காகும். தலித் மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக, விடுதலைச்சிறுத்தைகளுக்கு எதிராகவும் வெறுப்பை விதைக்கும் வகையிலும் வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டும் வகையிலும் பா.ம.க தரப்பிலிருந்து அப்பட்டமானதொரு அவதூறு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இதில் துளியும் உண்மை இல்லை. திட்டமிட்டு விடுதலைச்சிறுத்தைகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்புவதையே தமது தொழிலாகக் கொண்டு தரம்தாழ்ந்த அரசியல் செய்வதே பாமகவின் வாடிக்கையாக உள்ளது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

மரணவதையால் துடியாய்த் துடிக்கும் அந்த இளைஞரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு எந்த முனைப்பையும் காட்டாமல், ஈவிரக்கம் துளியுமின்றி, மரணவாக்குமூலத்தை எப்படி சொல்லவேண்டுமென்பதை அவருக்குச் சொல்லிக்கொடுத்து அதனை ‘வாட்சாப்’ மூலம் பதிவு செய்வதிலேயே தீவிரம் காட்டியுள்ளனர்.

சொந்த சகோதரனின் மரணவலியையும்கூட தமது அரசியல் ஆதாயத்துக்கு மூலதனமாக்குவதில் பாமகவினர் மிகவும் குறியாக இருந்துள்ளனர். தற்போது அதனைப் பொதுத்தளங்களில் மிக வேகமாகப் பரப்பிவருகின்றனர்.

அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? அதன் பின்னணி என்ன ? அவர் அப்போது குடிபோதை யில் இருந்தாரா, இல்லையா? அவரை எரித்துக் கொலை செய்யுமளவுக்கு அப்பகுதியில் ஆனந்த னின் உறவினர்கள் மற்றும் அவர்சாரந்த சமூகத்தினர் பலவீனமாக உள்ளனரா? மணல்கொள்ளைக் கும், இவரது சாவுக்கும் தொடர்புள்ளதா? தலித் இளைஞர்களுக்கும் ஆனந்தனுக்கும் இடையில் என்ன சிக்கல்? ஏற்கனவே காவல்துறையினர் ஏன் அவரைக் கைது செய்தனர்? ஆனந்தன் மணல் கொள்ளையை எதிர்த்தும் அநீதிகளை எதிர்த்தும் தட்டிக்கேட்ட ஒரு போராளி தானா? உள்ளூ ரிலேயே அவருக்கு ஏதேனும் காதல் பிரச்சினை இருந்ததா? அவர் காதலித்த பெண்ணால் அவர் மனமுடைந்தாரா, இல்லையா? அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் அவரது சமூகத்தைச் சார்ந்த, குறிப்பாக பாமகவைச் சார்ந்த இளைஞர்கள் அவரைக் கேவலமாகப் பேசினார்களா, இல்லையா? தற்கொலை செய்ய முயற்சித்தபோது அங்கிருந்த சிலர் அவரைத் தடுத்தார்களா, இல்லையா?

இன்னும் இவை போன்ற ஏராளமான கேள்விகள் உள்ளன? ஆனால், பொய்யை எழுத்துப்பூர்வ மாகச் சொன்னால், மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடும் என்கிற கோயபல்ஸ் உத்தியை பாமகவினர் தொடர்ந்து கையாளுகின்றனர். கோயல்பல்ஸின் புளுகுச்சாயம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லையென்பதுடன் ஒருகட்டத்தில் அது உலகரங்கில் வெளுத்துப்போனது என்பதும் வரலாறாகும். இந்நிலையில், பாமகவின் உருட்டல் மிரட்டல் அரசியலுக்கு அஞ்சாமல் தமிழக அரசு நேர்மைத்திறத்தோடு இவ்வழக்கை விசாரிக்க வேண்டுகிறோம். எனவே, இவ்வழக்கை மையப் புலனாய்வு (சிபிஐ) விசாரணைக்கு அல்லது சிபிசிஐடி விராரணைக்கு உட்படுத்துமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அத்துடன், ஆனந்தனின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.