டில்லி

ப்பல் மூலம் குறைந்த செலவில் ஹஜ் பயணம் செய்யும் இந்திய திட்டத்துக்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

ஹஜ் பயணம் கடந்த 1995 ஆம் ஆண்டு வரை கப்பல் மூலமும் செய்யப்பட்டு வந்தது.   மும்பையில் இருந்து சவுதி அரேபியா செல்ல அதுவரை கப்பல் வசதி இருந்தது.   1995 ஆம் ஆண்டு அந்தக் கப்பல் நிறுத்தப் பட்டது.   அதன் பிறகு இந்தியாவில் இருந்து விமானம் மூலம் மட்டுமே ஹஜ் பயணிகள் அனுப்பப் பட்டு வருகின்றனர்.  தற்போது குறைந்த செலவில் ஹஜ் பயணம் செய்ய இந்தியா திட்டம் ஒன்றை தீட்டியது.   இன்று டில்லியில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் பேசினார்.   அப்போது அவர், “நமது நாட்டில் இருந்து கடல் வழியாக ஹஜ் பயணிகளை அனுப்புவதற்கு கொள்கை அளவில் சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது.    இரு நாட்டு அதிகாரிகளும் பேசி இதற்கு தேவையான தொழில் நுட்ப வசதிகள் ஏற்பாடு செய்வார்கள்.

இனி வரும் ஆண்டுகளில் கடல் வழியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.   இந்தக் கடல் வழிப் பயணத்தினால் ஹஜ் பயணத்துக்கான செலவு மிகவும்குறையும்.   ஏழை எளிய இஸ்லாமியர்களும் இனி கடல் வழியாக குறைந்த செலவில் ஹஜ் பயணம் செல்லலாம்.

இந்த ஆண்டு முதல் பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது.  45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் நான்கு அல்லது ஐந்து ப் ஏர் கொண்ட குழுவாக ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   மேலும் அவர்களுக்கு தனியாக தங்குமிடம், போக்குவரத்து மற்றும் உதவிக்கான பெண் ஊழியர்கள் பணி அமர்த்தல் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனர்.   இந்த ஆண்டு சுமார் 1300 பெண்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்க உள்ளது”  என தெரிவித்தார்.