சவுதி அரேபியா : 37 தீவிரவாத குற்றவாளிகள் தலை துண்டிப்பு

ரியாத்

வுதி அரேபியாவில் தீவிரவாத குற்றவாளிகள் 37 பேர் தலை நேற்று துண்டிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய நாட்டில் தண்டனைகள் மிகவும் கடுமையானதாகும். குற்றம் செய்தோருக்கு மரண தண்டனை விதிப்பது அங்கு சகஜமாகும். மரண தண்டனை குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தலையை துண்டித்து தண்டனை அளிக்கப்படுவது அங்கு வழக்கமான ஒன்றாகும் சமீபத்தில் இந்தியர் ஒருவர் அவ்வாறு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டது இந்தியாவில் கடும் சர்ச்சையை உண்டாகியது.

சவுதி அரேபியா உள்நாட்டு தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பயங்கரவாத கொள்கையை பரப்புவோர், பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோர் மற்றும் அத்தகைய தாக்குதலுக்கு உதவி புரிந்தோர் என 37 பேரை கைது செய்து விசாரணை நடந்தது. விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இவர்கள் சவுதியில் உள்ள ரியாத், மெக்கா, மதினா மற்றும் ஆசிர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் அவரவர் இடங்களில் நேற்று தண்டனை அளிக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இவர்கள் 37 பேரும் ஒரே நேரத்தில் தலை துண்டிக்கப்பட்டு  கொல்லப்பட்டனர்.

இவர்களில் இருவருடைய தலை இல்லாத உடல்கள் மட்டும் ரியாத் நகரில் மக்கள் பார்வைக்காக ஒரு இடத்தில் மாட்டப்பட்டு இருந்தன. இவ்வாறு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சவுதி பாதுகாப்புத் துறை கட்டிடத்தின் மீது ஐ எஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு அடுத்த நாள் இந்த தலை வெட்டும் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.