ரியாத்:

ஒரு நாட்டில் யார் குடிமகனாக வேண்டும்?, ஆக கூடாது என்று கேள்வி கேட்டால் உடனடியாக பதிலளித்துவிடலாம். ஆனால், சவுதியில் தற்போது வழங்கப்பட்டுள்ள ஒரு குடியுரிமை பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஆம்.. போபியா என்ற ரோபோவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இச்செயல் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. எதிர்கால முதலீடுகளுக்கான இந்த ஆரம்பம் ரியாத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ‘‘எனக்கு வழங்கப்பட்ட இந்த கவுரவம் மற்றும் தனிப்பட்ட வேறுபாடு பெருமையாக உள்ளது. வரலாற்றிலேயே ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி அங்கிகாரம் வழங்கியிருப்பது இது தான் முதன்முறையாகும்’’ என்று சோபியா கூறியது.

சோபியா ஒரு நவீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. மனிதர்களை போன்ற தோற்றம் கொண்ட இந்த எந்திரம் மனித பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்ளோடு எளிமையாக உரையாடியது. மதிப்பீட்டாளர் ஆண்ட்ரூஸ் ரோஸ் சோர்கின் கேள்விகளுக்கு சோபியா பதிலளித்தது.

‘‘என்னை நீங்கள் நல்ல முறையில் இருந்தால், நானும் உங்களுக்கு நல்ல முறையில் இருப்பேன். என்னை ஸ்மார்ட் இன்புட் அவுட்புட் சிஸ்டமாக நடத்துங்கள்’’ என்று சோபியா பதிலளித்தது.

சோபியாவுக்கு பின்னால் டேவிட் ஹான்சன் என்பவர் உள்ளார். இந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில் டேவிட், சோபியாவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதில், ‘‘நீ மனித இனத்தை அழிக்க வேண்டுமா?..தயவு செய்து இல்லை என்று கூறிவிடு’’ என்றார். ‘‘சரி நான் மனிதர்களை அழிப்பேன்’’ என்று சோபியா பதில் கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இதன் மூலம் இந்த ரோபோ மிகவும் பிரபலமானது. தற்போது இந்த சோபியா ரோபோவுக்கே முதல் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடந்த கருத்தரங்கில் சோபியா தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சோபியா மேலும் கூறுகையில், ‘‘மக்கள் மேலும் சிறந்த வாழ்க்கை வாழ நான் உதவி செய்வேன். இந்த உலகத்தை மேலும் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்ல என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’’ என்றது.

மனித இனத்திற்கு சோபியா என்ன செய்ய வேண்டும் என்பதை நிரூபிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் ரோபோக்களை பயன்படுத்த பலர் விரும்புவார்கள். ஆனால், சோபியா மக்களோடு தொடர்பு கொள்வதற்காக பயன்படுத்தப்படவுள்ளது. சவுதி அரேபியா குடிமகள் என்ற முறையில் சாதாரண ஆடைகளை சோபியா அணிய வேண்டும். குறைந்தபட்சம் கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.