ரியாத்

கொரோனா அச்சுறுத்தலால் ஹஜ் பயணம் செய்யத் திட்டமிட்டோர் அதைக் கைவிடுமாறு சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் எங்கும் பரவி உள்ளது.  சவுதி அரேபியாவில் 1563 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 10 பேர் மரணம்  அடைந்துள்ளனர்.  உலக சுகாதார மையம் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் கொரோனா பரவுதல் மிக அதிகமாக இருக்கும் எனக் கூறி உள்ளது.

இஸ்லாமியர்களில் புனிதத் தலமான மெக்கா சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது.   இங்கு வருடம் முழுவதும் உம்ரா பயணம் மற்றும் வருடத்துக்கு ஒரு முறை ஹஜ் பயணம் என இஸ்லாமியர்கள் லட்சக்கணக்கில் வருவது வழக்கமாகும்.  இந்த வருடம் உம்ரா பயணத்துக்கு இதுவரை சவுதி அரசு யாரும் வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளதால் இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு வர இயலவில்லை.

தற்போது ஹஜ் பயண காலம் நெருங்கி வருகிறது.  இதையொட்டி சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சர், ”சவுதி அரேபிய அரசு உம்ரா மற்றும் ஹஜ் பயணிகளுக்குச் சேவை செய்ய எப்போதும் தயாராக உள்ளது.  ஆனால் தற்போது உலக அளவில் கொள்ளை நோய் பரவி வருகிறது   அரசு இஸ்லாமியர்கள் மற்றும் சவுதியில் வாழும் மக்களின் உடல்நலத்தைக் காக்க விரும்புகிறது.

எனவே அனைத்து நாடுகளில் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ஹஜ் பயணத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.  தற்போது மோசமாக உள்ள இந்த நிலை சீரடையும் வரை தங்கள் ஹஜ் பயண ஏற்பாடுகளைத் தயவு செய்து தள்ளி வைக்க வேண்டும்” எனத் தொலைக்காட்சியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.