செளதி அரேபியாவில் 90000 மசூதிகள் மீண்டும் திறப்பு!

ரியாத்: இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக, மெக்கா நீங்கலாக, தனது நாட்டில் 90,000 மசூதிகளை மீண்டும் திறந்துள்ளது செளதி அரேபியா.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கிய காலகட்டத்திலிருந்து, தற்போதுதான் முதன்முறையாக நம்பிக்கையாளர்கள், நாடெங்கிலுமுள்ள 90000 மசூதிகளில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ஹரம் மசூதி மற்றும் காபா ஆகியவை அமைந்திருக்கும் மெக்காவில், வழிபாட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.

அதேசமயம், தற்போதைய தளர்வால் மசூதிகளுக்கு வரும் நம்பிக்கையாளர்கள், 2 மீட்டர் இடைவெளி விதிமுறையைப் பின்பற்றுதல் மற்றும் தொழுகைக்கு முன்னதாக சுத்தி செய்யும் குளியலறைகளை முடூதல் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், வழிபாட்டுக்கு வருபவர்கள், 2 அடுக்குகள் கொண்ட முகக் கவசம் அணிந்து வருதல் மற்றும் வீட்டிலிருந்தே பாய் எடுத்துவருதல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.