ரியாத்: கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்டிருந்த ஹஜ் யாத்திரைக்கு அக்டோபர் 4ந்தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக சவூதி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வெளிநாட்டு யாத்ரிகர்கள் நவம்பர் 1ந்தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

இஸ்லாமியர்களின் புனித இடமாக கருதப்படும், சவூதியில் உள்ள மெக்கா மசூதிக்கு  ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 25 லட்சம் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக,  இந்தாண்டு  வெளிநாட்டு ஹஜ் யாத்ரீகர்கள் சவூதி வர அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் ஹஜ் யாத்திரைக்கு யாரும் செல்ல முடியாத நிலை தொடர்ந்து வந்தது.  கடந்த ஏழு மாதங்களாக  நீட்டிக்கபட்டிருந்த தடை இப்போது விலக்கப்பட்டு உள்ளது.  யாத்ரீகர்களை புனித பயணத்திற்கு அனுமதிக்க சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல், ஐக்கிய அரபு அமிரகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நாள் ஒன்றுக்கு   6 ஆயிரம் பேர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கபட்டுள்ளது. இது அக்டோபர் 18ந்தேதி முதல் மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.

அதைத் தொடர்ந்து நவம்பர் 1 ம் தேதி முதல் குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒரு மொபைல் பயன்பாட்டை உருவாக்கி வருகிறது, இது உம்ரா மீண்டும் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கிடைக்கும், இதன்மூலம் ஹஜ் வர விரும்பும்  யாத்ரீகர்கள் பதிவு செய்து, அனுமதி பெற வேண்டும், மேலும், அரசு அறிவுறுத்தி வரும்  சுகாதார வழிகாட்டுதல்களையும் அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறி உள்ளது.

புனித பயணிகள் வருகையையொட்டி மெக்கா முழுவதும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  மசூதி மற்றும் சுற்றுப் புற பகுதிகளை தூய்மை படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.