ரியாத்

வுதி அரேபியாவின் புகழ்பெற்ற சவுதி அரம்கோ உலகில் அதிக லாபகரமான நிறுவனம் என்னும் தகவல் வெளியாகி உள்ளது.

சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற எண்ணெய் நிறுவனங்களில் சவுதி அரம்கோ ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பங்குதாரர், பங்குத் தொகை உள்ளிட்ட பல விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. சர்வதேச ஆய்வு நிறுவனங்களான ஃபிட்ச் மற்றும் மூடி போன்ற நிறுவனங்களுக்கு உலகின் பல நிறுவனங்கள் தங்கள் கணக்கு வழக்குகளை பார்வையிட அனுமதித்து வந்தன.

ஆனால் சவுதி அரம்கோ அந்த நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிறுவனம் கோடானு கோடி கணக்கில் லாபம் அடைந்து வருவதாக கூறப்பட்டாலும் சரியான அளவு குறித்து யாராலும் சொல்ல முடியவில்லை. சமீபத்தில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் நாட்டின் பொருளாதார சிர்திருத்தம் குறித்த திட்டங்களை தொடங்கிய பிறகு அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சி அடைந்தன.

அந்த வளர்ச்சிக்காக பொதுமக்களிடம் கடன் பத்திரங்களை விற்க முற்பட்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்கள் அடைந்துள்ள லாபம்குறித்த விவரங்களை வெளியிட்டன. அவ்வரிசையில் சவுதி அரம்கோ முதலிடத்தில் உள்ளது.

இந்த நிறுவனத்தின் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான வருமானம் $359.9 பில்லியன் ஆகும். இது இந்திய மதிப்பில் ரூ.249.5 லட்சம் கோடி ஆகும். இந்த நிறுவனத்தின் லாபம் $111.1 பில்லியன் ஆகும். அதாவது ரூ.76.9 லட்சம் கோடி ஆகும்.

இதை ஒட்டி உலகிலேயே அதிக லாபமான நிறுவனம் சவுதி அரம்கோ என தெரிய வந்துள்ளது.