சவுதி அரேபிய எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் உதவி செய்ததா? : சவுதி உறுதி

ரியாத்

வுதியின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடந்த தாக்குதலுக்கு ஈரான் உதவி உள்ளதாக சவுதி அரேபிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமான உடைந்த பாகங்கள்

எண்ணெய் வள நாடுகளில் ஒன்றான சவுதி அரேபிய அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் அராம் கோ ஆகும்.   இந்த நிறுவனத்தின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஆளில்லா விமானம் மூலம் வான்வழித் தாக்குதல்கள் நடந்தன.    இதன் விளைவாக உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சவுதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை செய்தித் டர்பாளர் துர்க்கி அல் மால்கி ரியாத் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.   அப்போது அவர், “அராம்கோவுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்தின ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் சிதைந்த பாகங்கள் கிடைத்துள்ளன.   அவை உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் நாட்டின் வடக்கு திசையில் இருந்து ஏவப்பட்டுள்ளன.   இந்த தாக்குதலுக்கு ஈரான் உதவி உள்ளது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகி உள்ளது.   இந்த  தாக்குதல் ஏமனில் இருந்து நடைபெறவில்லை.  இந்த தாக்குதலில் 18 ஆளில்லா விமானங்களும் 7 நவீன அதி துல்லிய ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விரைவில் குற்றவாளிகள் குறித்த சரியான விவரம் கண்டறியப்பட்டு வெளியிடப்படும்.   இந்த தாக்குதலால் நமது அரசின் எண்ணெய் உற்பத்தியில் பாதிக்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   இந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பதை கண்டறியும் நடவடிக்கையில் பாதுகாப்புத் துறை ஈடுபட்டுள்ளது.” என தெரிவித்தார்.