ஜமால் கஷோகியின் பிள்ளைகளை தாஜா செய்யும் சவூதி அரசு

ரியாத்: சவூதி அரேபிய அரசால், கொல்லப்பட்ட அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் பிள்ளைகளுக்கு, சவூதி அரசால் நிறைய சன்மானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம், துருக்கிய தலைநகர் இஸ்தான்புல்லில், சவூதி அரேபிய அரசால், அந்நாட்டு தூதரக அலுவலகத்தினுள்ளேயே வைத்து கொலை செய்யப்பட்டார், அமெரிக்காவில் வசித்துவந்த சவூதியின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கஷோகி.

சவூதி அரசக் குடும்பத்திற்கெதிராக, குறிப்பாக, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதிவந்த காரணத்திற்காகவே அவர் கொலை செய்யப்பட்டதாக பரவலாக பேசப்படுகிறது. இந்தக் கொலைக்கு முக்கிய காரணம் முகமது பின் சல்மான்தான் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

உலகெங்கிலும் தனக்கெதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ள சூழலில், ஜமாலின் பிள்ளைகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுவதை தவிர்க்கும் பொருட்டு, அவர்கள் நான்கு பேருக்கும் வீடுகள் மற்றும் மில்லியன் கணக்கிலான டாலர்கள் ஆகியவற்றை அளித்து வருகிறது சவூதி அரசு.

இந்த வெகுமதிகளால்தான், ஜமாலின் பிள்ளைகளிடமிருந்து, இதுவரை சவூதி அரசைக் குற்றம்சாட்டி, கோபமான பேட்டிகள் எதுவும் வெளிவரவில்லை என்று நம்பப்படுகிறது. கடந்த 6 மாதங்களில், ஒரே ஒரு பேட்டி மட்டுமே ஜமாலின் மகன்கள் சார்பில் கொடுக்கப்பட்டது. அதிலும், அவர்கள் சவூதி பட்டத்து இளவரசரை குற்றம் சாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.