ரியாத்:

மரண தண்டனை விதிப்பதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருக்கிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளது.

கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதை பொருள் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சவுதியில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் அதிகம்.

இத்தகவலை அமெரிக்காவில் இயங்கும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் ‘டைம்‘ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது “கொலை வழக்கை தவிர மற்ற குற்ற வழக்குகளில் மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

சவுதியில் கடந்த ஆண்டில் மட்டும் 150 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை 600 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.