பொதுத்துறையில் செய்யப்படும் தேவையற்ற செலவுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சவுதி அரேபியா இன்னும் மூன்றே ஆண்டுகளில் மொத்தமாக திவாலாகிவிடும் என்று அந்நாட்டின் இரு அமைச்சர்கள் எச்சரிகை விடுத்துள்ளார்கள்.
saudi_arabia
அரசின் பொதுத்துறை பணியாளர்களில் 70% பேர் ஒழுங்காக வேலை செய்வதில்லை, அவர்களிடம் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்ய வேண்டும் என்ற நேர்மையும் இல்லை. அரசு இயந்திரம் முற்றிலும் சீரற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. வேலையை விட்டு விலகிய ஊழியர்களுக்கு கூட சம்பளம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் சவுதி அரேபிய அரசு சிக்கன நடவடிக்கையாக அமைச்சர்களின் சம்பளத்தையும் சலுகைகளையும் வெகுவாக குறைப்பதாக அறிவித்தது. கச்சா எண்னெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தபடியால் கடந்த ஆண்டு அந்நாட்டில் நிதி பற்றாக்குறை மட்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
அந்நாட்டின் குடியியல் பணிகள் துறையின் அமைச்சர் அல் அராஜ் அந்நாட்டு அரசு ஊழியர்கள் மிக மோசமாக வேலை செய்வதாகவும் அவர்களால்தான் இவ்வளவு பெரிய எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு டிவி விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, அரசும் தனது தேவையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் நாடு திவாலாவது உறுதி என்று அதே விவாதத்தில் பேசிய அந்நாட்டின் பொருளாதார இணை-அமைச்சர் முகமது அல் துவைஜ்ரி குறிப்பிட்டார்.