ரியாத்:

கத்தாரை தீவாக மாற்றும் வகையில் கடல் சார்ந்த கால்வாய் அமைக்க சவுதி அரேபியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தாருக்கு எதிராக சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த வகையில் சவுதி பிராந்தியத்தில் சல்வா மற்றும் காவ்ர் அல் உதய்த் இடையே கடல் சார்ந்த கால்வாய் அமைக்க சவுதி அரசு முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு நாளிதழான சாப்க் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் அதிகாரப்பூர்வ அனுமதி பெறுவதற்காக காத்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்வழிப்பாதையாக அமைக்கப்படும் இந்த கால்வாய் 60 கி.மீ., தொலைவை கொண்டிருக்கும். 200 மீட்டர் அகலமும். 15 முதல் 16 மீட்டர் வரையிலான ஆழமும் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் கன்டெய்னர் மற்றும் பயணிகள் கப்பல்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கால்வாயின் வடக்கு பகுதி கத்தார் எல்லையை ஒட்டி 1 கி.மீ., தொலைவுக்கு அமையவுள்ளது. இதை ராணுவப் பகுதியாக அறிவிக்கப்படும். இதன் மூலம் 2 நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு நிரந்தர தடை விதிக்கப்படும் சூழல் உருவாகும். 75 கோடி டாலர் மதிப்பிலான இந்த பணியை 12 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த வரைபடமும், தகவலும் மத்திய கிழக்கு டுவிட்டர் பயனாளிகள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.