இளவரசர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள மாளிகை

ரியாத்

வுதி இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பில்லியன் டாலர் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் (வயது 32) தனது தலைமையில் சவுதி ஊழல் எதிர்ப்பு உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.  அந்தக் குழுவின் பரிந்துரைப்படி 11 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.  அதற்குப் பின் கைதுகள் தொடர்ந்து வருகின்றன.  அத்துடன் சவுதி இளவரசர்களில் ஒருவர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.  அது கொலை என ஒரு செய்தி வெளியாகியது.   கைது செய்யப்பட்ட இளவரசர்களும், அமைச்சர்களும் சொகுசு மாளிகைகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சவுதி அரேபியாவின் அட்டர்னி ஜெனரல் ஷேக் சவுத் அல் மொஜிப் சில தகவல்கள் அளித்துள்ளார்.  “கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு 201 பேர் விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர்.   இந்த ஊழல் கடந்த சில ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது.   இதில் 100 பில்லியன் டாலருக்கு ஊழல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

விசாரணைக்கு உட்படுத்தப் படப் போகும் நபர்களைப் பற்றி எந்த தகவலும் அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.  மேலும், “இதுவரை விசாரணைக்காக அழைக்கப்பட்ட 208 நபர்களில் 7 பேர் குற்றச்சாட்டின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சவுதி அரேபிய வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு அடையவில்லை.  ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுடைய சொந்த வங்கிக் கணக்குகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.