பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி வழக்கு: சவுதி அதிகாரிகள் துருக்கி வருகை

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமான வழக்கில் விசாரணை மேற்கொள்வதற்காக துருக்கிக்கு சவுதி குழு வந்துள்ளது.

saudi

இதுகுறித்து துருக்கி ஊடகங்கள் தரப்பில், ” சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமான விவகாரத்தில் துருக்கியுடன் கூட்டு விசாரணை நடத்த சவுதி அதிகாரிகள் துருக்கி வந்துள்ளனர் ” என்று செய்தி வெளியிட்டுள்ளது. சவுதி தரப்பிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூட்டு விசாரணைக்கு துருக்கி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சவுதி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜமால் கஷோகிஜி குறித்தும் துருக்கி – சவுதிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்தும் ட்ரம்ப், ” சவுதி அரசர் சல்மானிடம் நான் இதுவரை நான் பேசவில்லை. விரைவில் பேசுவேன். இது மிகவும் தீவிரவான விஷயம். இந்த பிரச்சனையை தீவிரமான முறையில் தான் பார்க்க வேண்டும் ” என்றார்.

முன்னதாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஜமால் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்து, குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர். துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் கடந்த வாரம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற அவர் மாயமானார்.

ஜமால் மாயமானது தொடர்புடைய வழக்கில் சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலைச் செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறி வந்த நிலையில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.