அகமதாபாத்:

குஜராத் மாநிலம் சவுராஷ்ட்ரா பகுதியில் சூடான நீரை விவசாயத்துக்கும், பொதுமக்களும் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் கான்பார் கிராமம் சவுராஷ்ட்ரா மண்டலத்தில் வருகிறது.
இப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

எனினும், இந்த கிராம விவசாயிகள் போர் போட்டனர். 1,710 அடிக்கு கீழே தான் தண்ணீர் கிடைத்தது.
ஆனால் தண்ணீர் சூடாக வந்தது. இந்த தண்ணீரை காலியாக உள்ள விவசாய கிணற்றில் நிரப்பி, அதன்பின்னர் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து தாம்ஜிபாய் கோதாசாரா என்ற விவசாயி கூறும்போது, காட்டன் பயிரிட்டு தோல்வி ஏற்பட்டது. அதன்பின்னர், 6 ஏக்கரில் மாதுளம் பழம் பயிரிட்டேன்.
தற்போது லாபகரமாக இருக்கிறது. எனினும் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது.

ரூ. 7 லட்சம் செலவழித்து போர்வெல் போட்டேன். ஆனால், 1,710 அடிக்கு கீழே தான் தண்ணீர் கிடைத்தது.  அதுவும் சூடாக இருக்கிறது.

என்னைப் போல் நிறையபேர் போர்வெல் போட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால், மண்ணின் தரம் கெட்டுப் போகும் என்கிறார்கள்.

நான் இந்த சூடான தண்ணீரை பயன்படுத்தித் தான் 2 வருடங்களாக விவசாயம் செய்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்றார்.

அதிக சூடான தண்ணீரை பயன்படுத்துவது பாதிப்பை உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்களும் பயன்படுத்தக் கூடாது, விவசாயத்துக்கும் பயன்படுத்தக் கூடாது என்கின்றனர்.

குறுகிய கால பயனுக்காக இப்படி சூடான நீரை பயன்படுத்தினால் மண்ணின் தரம் முற்றிலும் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.