புதுடெல்லி: இந்திய தேசிய மாணவர் யூனியனால் செருப்பு மாலை மற்றும் கருப்பு வண்ணம் பூசப்பட்டதையடுத்து, டெல்லி பல்கலை வளாகத்தில் வைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி சாவர்க்கரின் மார்பளவு சிலையை அகற்றியது ஏபிவிபி மாணவர் அமைப்பு.

இந்த சிலையுடன் சேர்த்து, பகத்சிங் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் சிலைகளும் அகற்றப்பட்டன.

மேற்கண்ட மூவரின் மார்பளவுச் சிலைகளும் டெல்லி பல்கலை வளாகத்தில் திடீரென வைக்கப்பட்டன. ஆனால், சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து இந்திய விடுதலைக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால், அவரின் சிலையை வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது சில தரப்பாரிடமிருந்து.

இந்நிலையில், சாவர்க்கரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, கருப்பு வண்ணமும் பூசப்பட்டதால், மொத்தமாக 3 சிலைகளையும் அகற்றிவிட்டது ஏபிவிபி அமைப்பு. இந்த மார்பளவுச் சிலைகளை வளாகத்தில் வைப்பதற்கு பல்கலை நிர்வாகத்திடமிருந்து எந்த முறையான அனுமதியும் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, முறையான அனுமதி கிடைக்கும்வரை 3 பேரின் மார்பளவுச் சிலைகளையும் பத்திரமான இடத்தில் வைக்க அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.