டெல்லி: தாஜ்மஹால் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி கூறி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. தென் மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் வட மாநிலங்களில் அதிக பாதிப்புகள் காணப்படுகின்றன.

குறிப்பாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துமாறு ஆக்ரா மேயர் நவீன் ஜெயின், உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துக்கு எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் இந்த கடிதத்தை கடந்த 21ம் தேதி முதலமைச்சர் ஆதித்யாநாத்துக்கு எழுதி இருக்கிறார். ஆக்ராவை காப்பாற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் முக்கியமாக வலியுறுத்தி உள்ளார்.

அந்த கடிதத்தை வெளியிட்டு உள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி. டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:ஆக்ரா நகரின் நிலைமை மோசமானதாக இருக்கிறது. கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

சரியான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், இந்த விஷயம் கை மீறிவிடும்.  நேற்று, நான் இதே பிரச்சினையை எழுப்பினேன். வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது.

கொரோனா சோதனைக்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.  அந்த வைரஸ் பரவலை நிறுத்த வேண்டுமானால், சரியான சிகிச்சை முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.