பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்போம் – ஹேமமாலினி

மும்பை

பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது பிள்ளைகளாகிய நம் கடமை என நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார்.

இந்தியாவில் 11000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பிரதமர் மே 3 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார்.

சமூக விலகலும், தனிமைப் படுத்தலுமே கொரோனா பரவுவதை தடுக்கும் முதன்மை வழியென பலரும் சமூக வலைதளங்களில் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஹேமமாலினி அரசு அறிவித்துள்ள ஊரடங்குச் சட்டத்தை இந்தியர் அனைவரும் கடைபிடித்து பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்த வீடியோ ஒன்றை அவர் டிவிட்டரில் இன்று வெளியிட்டுள்ளார்.

“பாரத மாதா தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். நாம் அவரால் தான் பிறந்தோம்,  அவரால் தான் பெருமைக்குரிய குடிமக்களானோம், அவரால் தான் உலகம் போற்றும் கலாச்சாரத்திற்கு சொந்தக்காரராக உள்ளோம். எனவே நமது பாரத மாதாவிற்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.

கொரோனாவிலிருந்து பாரத மாதாவை பாதுகாக்க பிள்ளைகளாகிய நாம் ஊரடங்கு சட்டத்தை முறையாகப் பின்பற்றுவோம். அரசு கூறியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது பின்பற்றி கொரோனாத் தொற்றின் சங்கிலியை உடைப்போம். கொரோனாவிற்கு எதிரான போரில் பாரத மாதாவை வெற்றி பெறச் செய்வோம், வீட்டிலேயே இருந்து சமூக விலகலை கடைப்பிடிப்போம்” என வேண்டுகோள் விடுத்தார்.

71 வயதான நடிகை ஹேமமாலினி தற்போது தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.