ஜெயலலிதா எஸ்டேட் காவலாளி கொலை: முக்கிய குற்றவாளி கைது

 

கோவை:  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சயான் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

நீலகிரி மாவட்டத்தில், 900 ஏக்கரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில், மிகப் பிரமாண்ட அளவில் பங்களா  கட்டப்பட்டுள்ளது.

 

பாதுகாப்புகள் ஏற்பாடுகள் கடுமையாக உள்ள இந்த பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி 10 ஆம் எண் கேட் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார்.

மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் கடுமையாக தாக்கப்பட்டார்.

பிறகு மர்ம கும்பல், பங்களாவுக்குள் புகுந்து தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது.  இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நீலகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையிலான காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர்.  மேலும் குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

காவல்துறையினருக்கு போயஸ்கார்டன் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர் கொலை நடந்த சில தினங்களில் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி பலியானார்.
கனகராஜின் நண்பரும் முக்கிய குற்றவாளி என காவல்துறை சந்தேகிக்கும் சாயன் என்பவரும் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொர்பாக இதுவரை கேரள மாநிலத்தைச் சேர்ந்த தீபு, சதிஷன், சந்தோஷ், உதயகுமார், டீபு, சந்தோஷ், சதீஷன் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானை  கோத்தகிரி போலீசார் இன்று காலையில் கைது செய்தனர்.   சயானை விசாரிக்கும்போது கொலை, கொள்ளை சம்பவம் குறித்த உண்மைகள் வெளிப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.