டில்லி

பாரத ஸ்டேட் வங்கி தனது ஆன்லைன் வங்கிக் பண வர்த்தனை கட்டணங்களை ரத்து செய்துள்ளது.

நாட்டின் பெரிய பொதுத் துறை வக்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியும் ஒன்றாகும். ஸ்டேட் வங்கியில் இணய தள வங்கி சேவைகளை மட்டும் சுமார் 6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதை தவிர மொபைல் வங்கி சேவையை சுமார் 1.41 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். வங்கி பரிவர்த்தனைகளில் சுமார் 18% மொபைல் சேவை மூலம் நடைபெற்று வருகிறது.

ஸ்டேட் வங்கி யோனோ என்னும் டிஜிட்டல் செயலி ஒன்றையும் இயக்கி வருகிறது. இந்த செயலி பயன்பாட்டையும் அதிகரிக்க வங்கி விரும்பியது. எனவே இவ்வாறு ஆனலைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களை ஊக்குவிப்பது குறித்து வங்கி நிர்வாகம் ஆலோசனை செய்தது. இந்த ஆலோசனையில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வோருக்கு விதிக்கப்படும் கட்டணங்களை ரத்து செய்ய பாரத ஸ்டேட் வங்கி முடிவு எடுத்தது.

இதை ஒட்டி பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்பில், தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT), உடனடி கட்டண சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ் நேர மொத்த தொகை செலுத்தல் (RTGS) ஆகியவற்றின் சேவைக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண ரத்து வரும் ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வர உள்ளது.