பாரத ஸ்டேட் வங்கிகளின் 1300 கிளைகளில் குறியீட்டு எண் மாற்றம் !

மும்பை

பாரத ஸ்டேட் வங்கி தனது 1300 கிளைகளின் பெயர் மற்றும் குறியீட்டு எண்களை மாற்றி உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி தனது ஐந்து துணை வங்கிகளையும் இந்த வருடம் ஏப்ரலில் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.   அவை பிகார் அண்ட் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, பாடியாலா ஸ்டேட் வங்கி,  திருவாங்கூர் ஸ்டேட் வங்கி,  ஐதராபாத் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி ஆகியவை ஆகும்.

ஒவ்வொரு வங்கிக்கும் கிளையின் பெயர் மற்றும் கிளை குறியீட்டு எண் (IFSC CODE) மாறுபடும்.   இந்த எண்ணைக் கொண்டு தான் ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.   11 இலக்க எண் மற்றும் எழுத்துக்கள் கொண்ட இந்த குறியீட்டு எண்ணின் மூலம் வங்கியின் பெயர், கிளை, மற்றும் இடம் ஆகியவைகளை கண்டறிய முடியும்.  தற்போது பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்துள்ள வங்கிகளுக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் குறியீடு கொண்ட எண்களே அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரவீன் குப்தா செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.  அவர், “எங்களது துணை வங்கிகளும் இனி எங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது அதனால் கிளைக் குறியீட்டு எண் மாற்றப்பட உள்ளது.   இது குறித்து எங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கப் பட்டுள்ளது.   அத்துடன் பழைய கிளைக் குறியீட்டு எண்ணைக் கொண்டு புதிய குறியீட்டு எண்ணை தானியங்கி மூலம் கண்டு கொள்ளும் வசதி ஏற்படுத்தி உள்ளது.   பழைய குறியீட்டு எண்ணைக் கொண்டும் பண பரிவர்த்தனை செய்யும் படி வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது “ என கூறி உள்ளார்.