டெல்லி:

தனியார் வங்கிகளின் தலைமை நிர்வாகிகளை விட எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா மிக குறைவான சம்பளமே பெற்று வருகிறார்.

கடந்த நிதியாண்டில் இவர் மொத்தம் 28.96 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதே சமயம் ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ சாந்திரா கோச்சர் கடந்த நிதியாண்டில் அடிப்படை ஊதியமாக மட்டும் ரூ. 2.66 கோடியை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இது தவிர ரூ. 2.2 கோடி போனஸாக பெற்றுள்ளார். இதர படிகள் உள்ளிட்ட ரூ. 2.43 கோடி மதிப்பு சலுகைகளை அவர் பெற்றுள்ளார்.

ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ ஷிக்கா சர்மா அடிப்படை ஊதியாக ரூ. 2.7 கோடி, இதர ஊதியமாக ரூ. 1.35 கோடி மற்றும் வீட்டு வாடகை உள்ளிட்ட படிகள் மூலம் ரூ. 90 லட்சம் பெற்றுள்ளார்.

எஸ் பாங்க் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ ரானா கான்பூர் 2016&17ம் ஆண்டில் ரூ. 6.8 கோடி சம்பளம் பெற்றுள்ளார். ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி கடந்த நிதியாண்டில் ரூ. 10 கோடி சம்பளம் மற்றும் ரூ. 57 கோடி மதிப்பு பங்குகளை பெற்றுள்ளார்.

இந்த பிரச்னையை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் கடந்த ஆகஸ்டில் கிளப்பினார். குறைவான சம்பளம் காரணமாக திறமை மிக்கவர்களை வங்கிக்கு கவர்ந்து இழுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

துணை வங்கிகளை எஸ்பிஐ.யுடன் இணைத்ததன் மூலம் வங்கியின் 42.04 கோடியாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பங்கு மதிப்பும் ரூ. 23.7 சதவீதமாகவும், டெபாசிட் 21.16 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. ஊதிய முரண்பாடு உள்ளிட்ட இதர சலுகைகளின் குறைபாடு நீண்ட நாட்களாக நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.