டெல்லி:

ஜன்தன் கணக்குகளை பராமரிக்க அதிக செலவாகிறது என்று எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றவுடன் அனைவரும் வங்கி கணக்கு என்ற அடிப்படையில் ஜன்தன் கணக்கு தொடங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 கோடி ஜன்தன் கணக்குகள் தொடங்கப்பட்டதாக மோடி அரசு கூறி வந்தது. இந்நிலையில் தற்போது எஸ்பிஐ.யில் கணக்கு வைத்துள்ளவர்கள் வரும் ஏப்ரல் முதல் 5000வரை குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், ’10 கோடி ஜன்தன் கணக்குகளைப் பராமரிக்க பெரும் செலவாகிறது. இந்த நிதிசுமையை சமாளிக்கவும், செலவை ஈடுகட்ட குறைந்தபட்ச வைப்புத் தொகையைப் பராமரிக்காத கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘ இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும் அரசிடம் இருந்து எந்த பரிந்துரையும் வரவில்லை. வந்தால் இது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும். குறைந்த பட்ச இருப்பான ரூ. 5 ஆயிரத்தில் 75 சதவீதம் வரை குறையும் கணக்குகளுக்கு பெருநகரங்களில் ரூ. 100 மற்றும் சேவை வரி அபராதமாக விதிக்கப்படும்.

50 சதவீத குறைவுக்கு ரூ. 50 அபராதம் விதிக்கப்படும். வங்கி அமைந்திருக்கும் இடத்திற்கு ஏற்ப அபராதம் மாறுபடும். அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ச இருப்பு வைப்பதை பராமரிக்கின்றன. எஸ்பிஐ.யில் தான் குறைந்த அளவு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது ஏற்கனவே அமலில் உள்ளது’’ என்றார்.
அருந்ததி மேலும் கூறுகையில், ‘‘எஸ்பிஐ மட்டும் தான் 2012ம் ஆண்டு முதல் அனைத்து தொகையையும் எடுத்துக் கொள்ளும் நடைமுறையை கொண்டு வந்தது. பல வாடிக்கையாளர்கள் ரூ. 5000 இருப்பை பராமிரக்கின்றனர். அதனால் அவர்கள் அபராதத்தை பற்றி கவலைப்பட வேண்டியது கிடையாது. இந்த அபராதம் ஜன்தன் கணக்குகளுக்கு பொருந்தாது.

இதர வங்கி ஏடிஎம்.களில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் எடுத்தால் ரூ. 20 கட்டணமும், எஸ்பிஐ வங்கியில் 5 முறைக்கு மேல் எடுத்தால் ரூ. 10 கட்டணமும் வசூல் செய்யப்படும். ரூ. 25 ஆயிரம் வரை இருப்பு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ ஏடிஎம் கட்டணம் கிடையாது. அதேபோல் ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்கள் இதர வங்கி ஏடிஎம் கட்டணமும் கிடையாது’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘ஏடிஎம்.களில் பணத்தை எடுத்து அதை மற்றவர்ளுக்கு கொடுக்கின்றனர். அதை மீண்டும் அந்த நபர் வங்கியில் வந்து செலுத்துகிறார். இதனால் பல செலவு வங்கிக்கு ஏற்படுகிறது. இது யாருக்கும் வெளியில் தெரிவது கிடையாது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் இந்த நிலைப்பாடு எடுக்கப்படுகிறது. பணம் அச்சடிப்பது, போக்குவரத்து, எண்ணுதல், பாதுகாப்பு போன்றவைக்கு குறிப்பிட்ட தொகை செலவிடப்படுகிறது.

ஏடிஎம் நிறுவுவதற்கும், பராமரிக்கவும் செலவு ஏற்படுகிறது. அதனால் ஏடிஎம்.ல் பணம் எடுக்க கட்டணம் விதிப்பது நியாயமானது. சாதாரண ஒரு குடும்ப நபர் மாதத்திறகு 4 முறைக்கு மேல் பணம் ஏடிஎம்.களில் எடுக்க வேண்டி வராது. தொழில் செய்வோருக்கு தான் தினமும் பணம் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அவர்களும் மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் முறையில் பண பரிமாற்றம் செய்ய வேண்டும்.

வங்கி இது வரை நடுத்தர, சிறு, குறு தொழில்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு இறுதிக்கும் முத்ரா கடன் ரூ. 16 ஆயிரம் கோடி வழங்கப்படும்’’ என்றார் அருந்ததி பட்டாச்சார்யா.