ஆயுட்கால தடையை குறைக்க உச்சநீதிமன்ற ஆலோசனை : ஸ்ரீசாந்த் நிம்மதி

டில்லி

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஆயுட்கால தடை விதித்ததை மறு ஆய்வு செய்யுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 2013 ஆம் வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த், அங்கித் சாவன், அஜித் சண்டிலா உள்ளிட்ட 36 பேர் மீது சூதாட்ட குற்றம் சாட்டப்பட்டது.   இந்திய கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்த், அஜித் மற்றும் அங்கித் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்ள ஆயுட்கால தடை விதித்தது.

கடந்த 2015 ஆம் வருடம் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட அனைவரையும் டில்லி நீதிமன்றம் சூதாட்ட வழக்கில் இருந்து விடுவித்தது.    ஆகவே தனக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஸ்ரீசாந்த் கோரிக்கை விடுத்தார்.  அவரது கோரிக்கையை வாரியம் நிராகரித்தது.

கடந்த 2017 ஆம் வருடம் கேரள உயர்நீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரியத்தின் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார்.   அந்த வழக்கில் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.   ஆனால் அதை எதிர்த்து வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இது குறித்து உச்சநீதிமன்றம், “ஆயுட்கால தடை என்னும் கொடுமையான தண்டனையை அனைத்து நேரங்களிலும் அளிக்க கூடாது.    கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அப்போதைய சூழ்நிலையை ஆராயமல் இந்த தண்டனை அளித்துள்ளது.

எனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது

அத்துடன் ஆயுட்கால தடைக்கு பதிலாக இன்னும் மூன்று மாதங்களுக்குள் வேறு ஏதாவது தண்டனை அளிக்கலாம் எனவும் நீதிமன்றம் ஆலோசனை அளிக்கிறது.” என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஆயுட்கால தடை விலக்கப்படாத ஸ்ரீசாந்துக்கு இந்த உத்தரவு நிம்மதியை அளித்துள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.