கோவை முஸ்கான் ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்த உச்சநீதி மன்றம்

டெல்லி:

மிழகத்தையே உலுக்கிய கோவை பள்ளிக் குழந்தைகளான  ரித்திக் மற்றும் முஸ்கான் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட  தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

2010ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் ஆகியோரை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தனது தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி மனோகரன் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

கடந்த 2010 ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான்(10), சிறுவன் ரித்திக்(07) ஆகியோர், அந்த குழந்தைகளின் முன்னாள் பள்ளி வாகன ஓட்டுநர் மோகன்ராஜ் எனும் மோகனகிருஷ்ணன்  மற்றும் அவரது நண்பரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக  கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றபோது, காவலரின்  துப்பாக்கியை பிடுங்கி வண்டியை நிறுத்துமாறு மோகன்ராஜ் மிரட்டிதைத் தொடர்ந்து அவர்  என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கோவை மகிளா நீதிமன்றம்,  மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்துக் கடந்த 2012ம் ஆண்டு, நவம்பர் 1ந்தேதி  தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் ஏற்கனவே உறுதி செய்திருந்தன.

இந்த நிலையில், மனோகரன் தரப்பில்,கடந்த 2014ம் ஆண்டு  மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரோஹிங்டன், பாலி நரிமன் மற்றும் சூரியகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து,, மனோகருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தும், மனோகரனின் சீராய்வை மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.