கடன்கள் மீதான 3 மாத கால அவகாசம்: வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை ஏற்ற சுப்ரீம்கோர்ட்

--

டெல்லி: 3 மாத கால அவகாசத்தின் போது கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் மாதாந்தர கடன் தவணைகளை 3 மாதங்களுக்கு பிறகு செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

3 மாத அவகாசம் என்பது கடன் செலுத்துவதை தள்ளிவைக்கும் காலமாகும். வாங்கிய கடன் தள்ளுபடிக்காக அல்ல. எனவே கடன் வாங்கியவர்களும், சில்லறை வர்த்தகர்களும், கார்ப்பரேட் கடன் பெற்றவர்களும் 3 மாத அவகாசத்தை பயன்படுத்தாமல் தவிர்த்தனர்.

இந் நிலையில், 3 மாத கால அவகாசத்தின் போது கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: லாக்டவுன் காலகட்டத்தில் இந்த வட்டி விதிக்கப்படுவது கடன்களுக்கு விதிக்கப்பட்ட கால அவகாசம் என்ற நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது. எனவே ஊரடங்கின் போது, கடன்களுக்கு வட்டி வசூலிக்க கூடாது என்று நீதிமன்றம் அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வருமான இழப்பு காரணமாக கடன் தவணைகளில் செலுத்த முடியாதவர்கள் வட்டி நிலுவையை திருப்பிச் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may have missed