டில்லி

கொரோனாவுக்கு மருந்து அளிக்க ஆயுஷ் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆயுர்வேதம், யுனானி மருத்துவம் போன்றவற்றில் மருத்துவம் செய்ய ஆயுஷ் என்னும் மத்திய அரசுத் துறை பட்டங்களை வழங்கி வருகிறது.   இதைப் போல் ஹோமியோபதி மருத்துவர்களும் ஆங்கில மருத்துவத்துக்கு மாற்றாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.   இவர்களில் பலர் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரித்து  வந்தது.  இன்று இந்த அமர்வு அளித்த தீர்ப்பில், “ஆயுஷ் பட்டப்படிப்பு பெற்ற மருத்துவர்கள் கொரோனா சிகிச்சைக்கு மருந்துகளைச் சிபாரிசு செய்து அளிக்கலாம்.  ஆனால் இந்த மருந்துகள் அரசு அங்கீகாரம் பெற்ற மாத்திரைகள், அல்லது மருந்துகளை கொண்டவையாக இருக்க வேண்டும்.

இதைப் போல் ஹோமியோபதி மருத்துவர்களும் கொரோனா நோயாளிகளுக்கு எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளைத் தடுப்பு நடவடிக்கையாக அளிக்கலாம்.,  ஆனால் இவற்றைக் குணமடையச் செய்யும் மருந்துகள் என கூறப்பட மாட்டாது.,    மேலும் இந்த மருத்துவர்கள் யாரும் தங்களைப் பற்றியோ மருந்துகளைப் பற்றியோ எவ்வித விளம்பரமும் செய்துக் கொ:ள்ளக் கூடாது. ” என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் அளித்துள்ள வழிமுறையில், “ஆயுஷ் மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகள் வழக்கமான மருந்துகளுடன் கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அளிக்கலாம்.  ஆனால் இவற்றைக் கொண்டு முழு குணம் அளிப்பதாகச் சொல்லக் கூடாது.   இவை அனைத்தும் கூடுதல்  மருந்துகளே ஆகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது..