மேகதாது அணை : திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

டில்லி

மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

காவிரியின் குறுகே மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக அரசு அளித்த மனுவுக்கு மத்திய நீர்வள ஆணையம் தடையில்லா சான்றிதழ் அளித்துள்ளது. அதை ஒட்டி கர்நாடக அரசு இந்த அணைக்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க திட்டமிட்டது.  தமிழக அரசு இந்த திட்டத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு மனுவில் மத்திய நீர் வள ஆணையம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யவும், கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இன்றைய வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம், “இந்த மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை அளிக்க தடை விதிக்கவில்லை. கர்நாடக அரசு விரிவான அறிக்கை மட்டுமே அளிக்க உள்ளது. மற்றபடி மேகதாது அணை கட்டுவதற்கு முன்பு உச்சநீதிமன்ற அனுமதியை பெற வேண்டும். எனவே திட்ட அறிக்கை தயாரிக்க மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

அத்துடன் இந்த மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டிசுக்கு கர்நாடக அரசும் மத்திய அரசும் இன்னும் 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்.” என அறிவித்துள்ளது.