மும்பையில் உள்ள 3 சமண கோயில்களில் வழிபாடு நடத்தலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பை: மும்பையில் உள்ள 3 சமண கோயில்களில் வழிபாடு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. சமூக பரவலை தடுக்கும் நோக்கில், வழிப்பாட்டுத் தலங்கள் பெரும் கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கிய 8 நாள்  திருவிழாவின் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள 3 சமண கோவில்களில் தற்காலிக பிரார்த்தனைகள் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த விலக்கு 2 நாட்களுக்கு மட்டும் தான் என்றும், நிலையான இயக்க நெறி முறைகள் மற்றும் சமூக இடைவெளியுடன் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இடைக்கால உத்தரவானது மற்ற வழிபாட்டுத் தலங்களைத் திறக்க முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.