டில்லி:

ம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உச்சக் கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கு செல்ல எந்தவொரு அரசியல் கட்சியினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், சிபிஎம் தலைவர் சீத்தாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

அங்கு அவரது நண்பரும், மூத்த கம்யூனிஸ்டு தலைவருமான யூசுப் தரிகாமி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்திக்கவும் அனுமதி வழங்கியது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த  அரசியல் சாசனத்தின் 370 பிரிவை மத்திய அரசு நீக்கி, அதை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் உள்பட சுமார்  174 தலைவர்கள் தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காஷ்மீர் நிலைமையை பார்வையிட காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி,, குலாம் நபி ஆசாத்,  கே சி வேணுகோபால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் தலைவர் தினேஷ் திரிவேதி, திமுக சார்பாக திருச்சி சிவா உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட தலைவர்கள் காஷ்மீர் சென்றனர். ஆனால், அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், காஷ்மீரில் உள்ள  உறவினர்கள்  மற்றும் கட்சி உறுப்பினர்களை (யோசுப் தரிகாமி) பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி உச்சநீதி மன்றத்தில்  வழக்கு தொடுத்தார். அதேபோல் ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர்கள் சிலரும் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு  நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏபாப்டே அமர்வு விசாரித்து.அதைத்தொடர்ந்து வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டது.

அதில், சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று தனது கட்சித் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான யூசுப் தரிகாமியை சந்திக்கலாம் என்று அனுமதி வழங்கியது. மேலும், சீதாராம் யெச்சூரி இந்திய குடிமகன்தான். அவர் இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று தெரிவித்தனர்.

மேலும், யெச்சூரியின் வருகை கட்சித் தலைவர் யூசுப் தரிகாமியை ஒரு நண்பராகச் சந்திப்பதாக இருக்க வேண்டும், என்றும், அதில் எந்தவித  அரசியல் நோக்கமும் இருக்கக்கூடாது  என்றும், காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை செய்ய கூடாது.

அங்கு இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு செல்லும் அரசியல் தலைவர்கள் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி,  ஸ்ரீநகருக்குச் சென்று   யூசுப் தரிகாமியைப் பார்க்கவும், அவரது உடல்நிலை குறித்து அவர்களிடம் “அறிக்கை” செய்யவும் உச்ச நீதிமன்றம் எனக்கு அனுமதி அளித்துள்ளது. நான் அவரைச் சந்தித்ததும், திரும்பி வந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வேன் என்று தெரிவித்து உள்ளார்.