சேது சமுத்திர திட்டம் : மத்திய அரசை விளக்கம் கேட்ட உச்ச நீதிமன்றம்

டில்லி

சேது சமுத்திர திட்டம் பற்றிய மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆறு வாரத்துக்குள் விளக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சேது சமுத்திர திட்டம் என்பது 83 கிமீ தூரத்துக்கு மன்னார் வளைகுடாவுக்கும், பாக் ஜலசந்திக்கும் இடையில் சேது கால்வாய் அமைப்பதாகும்.   இதை அமைப்பதனால் ஆதம் பாலம் என ஆங்கிலேயராலும்,   ராம் சேது என இந்தியர்களாலும் அழைக்கப்படும் பாலம் போன்ற அமைப்பை இடித்தாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.    ராமர் சீதையை மீட்க தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு அமைத்தது இந்தப் பாலம் என நம்பப்படுவதால் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது.

இதையொட்டி சேது சமுத்திர திட்டம் அப்போதைய மத்திய அரசால் ஒத்தி வைக்கப்பட்டது.    ராமர் பாலத்தை இடிக்காமல் புதிய பாதையில் சேது சமுத்திர திட்டத்தை அமைக்க வேண்டி சுப்ரமணியன் சாமி ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் அளித்தார்.   இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், “புராண காலத்தில் இருந்ததாக சொல்லப்படும் ராமர் பாலம் பற்றிய தனது நிலைப்பாட்டையும்,   சுப்ரமணியன் சாமி தெரிவித்ததைப் போல மாற்றுப் பாதை பற்றிய நிலைப்பாட்டையும், மத்திய அரசு இன்னும் ஆறு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.   இதற்கு அரசு சரியான பதில் தெரிவிக்கவில்லையெனில் அரசுக்கு எதிராக சுப்ரமணியன் சாமிக்கு நீதிமன்றத்தை அணுக முழு உரிமை அளிக்கப் படுகிறது” என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாராளுமன்றத்தில் பாலத்தை இடிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளதை சுப்ரமணியன் சாமி தனது வாதத்தில் சுட்டிக் காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.