தீவிரவாதிகள் சிம் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனரா? : உச்சநீதிமன்றம் கேள்வி

--

டில்லி

தீவிரவாதிகள் சிம் கார்டுகள் கோரி விண்ணப்பித்து இருக்கிறார்களா என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

சிம் கார்டுகளுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டியது அவசியம் என மொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.     ஆதார் எண்களை இணைப்பதால் விவரங்கள் திருடப்படலாம் எனவும் அதனால் ஆதார் இணைப்பதற்கு தடை விதிக்கக் கோரியும் பொது நல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் கீழுள்ள சட்டத் தீர்வு அமர்வின் கீழ் ஆதார் வழக்குகளில் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வருகிறது.   அரசின் சார்பில், “ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளன.  அவற்றை யாரும் திருட வாய்ப்பில்லை.  மேலும் எந்த ஒரு தவறும் நடைபெறக் கூடாது என்பதற்காகவே ஆதார் எண்ணை சிம் கார்டுடன் இணைக்க அரசு அறிவித்துள்ளது.

தற்போது வங்கியில் எந்த வித மோசடியும் நடைபெறாமல் இருக்க ஆதார் இணைக்கப் படுகிறது.  அதே போல தீவிரவாதிகள் சிம் கார்டு பெற தடுக்க ஆதார் இணைக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது”  என தெரிவிக்கப் பட்டது.   இதை உச்சநீதிமன்ற அமர்வு ஒப்புக் கொள்ளவில்லை.

உச்ச நீதி மன்ற அமர்வு, “வங்கியில் மோசடி நடப்பதை தடுக்க ஆதார் எண் இணைப்பு என்பது ஒப்புக் கொள்ள முடியாது.   ஒரே கணக்காளர் பல்வேறு அடையாளங்களுடன் கடன் வாங்கி இது வரை எந்த மோசடியும் நடைபெறவில்லை.   எனவே இது தேவையற்ற வாதம்.   வங்கி மோசடிகள் ஆதார் மூலம் தடை செய்ய முடியும் என்பது மிக மிக குறைந்த நேரங்களில் மட்டுமே நடைபெறும்.

அப்படி இருக்க அதையும் சிம் கார்டுடன் ஆதார் இணைப்பதையும் எவ்வாறு ஒப்பிட முடியும்?  இது வரை தீவிரவாதிகள் சிம் கார்டு கோரி விண்ணப்பம் செய்துள்ளனரா?  அப்படி என்றால் எத்தனை பேர் அவ்வாறு விண்ணப்பித்துள்ளனர்?    ஏதோ ஒரு சில தீவிரவாதிகளைப் பிடிக்க 120 கோடி மொபைல் உபயோகிப்பாளர்களின் ஆதார் எண்ணை ஏன் இணைக்கச் சொல்கிறீர்கள்?”  என  மத்திய அரசை கேட்டுள்ளது.

You may have missed