முன்னாள் முதல்வர்கள் அரசு வீடுகளில் வசிக்க தடை : உச்சநீதிமன்றம்

டில்லி

த்திரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் அரசு வீடுகளில் வசிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநில சட்டசபையில் கடந்த 2016 ஆம் வருடம் அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவை ஒரு தீர்மானம் கொண்டு வந்தது.  அதன்படி  உத்திரப் பிரதேச முதல்வர்கள்  அவர்களுடைய  பதவிக்காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து அரசு வீடுகளில் வசிக்கலாம் எனவும் காலி செய்ய காலகெடு இல்லை எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.  இந்த அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், “அரசு பணிகளில் உள்ளவர் என்பதால் முதல்வருக்கு அரசு இல்லம் அளிக்கப்படுகிறது.  அதன்படி முதல்வர் பதவியில் இல்லாத போது அரசு அளிக்கும் வீடுகளில் வசிக்க அவர்களுக்கு உரிமை இல்லை.  எனவே அவ்வாறு வசிப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும்”  என  அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பின்படி முன்னாள் முதல்வர்களான ராஜ்நாத் சிங் (தற்போதைய மத்திய அமைச்சர்), முலயம் சிங் யாதவ் உள்ளிட்டவர்கள் தங்கள் அரசு வீடுகளை காலி செய்ய வேண்டி உள்ளது.  அதே போல கல்யாண் சிங்,  மாயாவதி, மற்றும் ராம் நரேஷ் யாதவையும் அரசு வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.