டில்லி

நாடெங்கும் உள்ள கோவில்களையும் வழிபாட்டு தலங்களையும் அரசு ஏன் நிர்வாகம் செய்கிறது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

பூரி ஜகன்னாதர் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் தரிசனத்துக்கு ஒரு சில கட்டுப்படுகளை காவல்துறை விதித்தது. அதனால் பக்தர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். கோவிலினுள் காலணி மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்த காவல்துறையினரை உச்சநீதிமன்றம் கண்டித்தது. இந்த விவகாரத்தில் 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரிசாவில் உள்ள பூரி ஜகன்னாதர் கோவில் ஊழியர்கள் அங்கு வரும் பக்தர்களை மிகவும் கொடுமைப்படுத்துவதாக ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ் ஏ போப்டே மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணை செய்யப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலிடம் சில கேள்விகளை வைத்தது.

நீதிபதி போப்டே, ”கோவில்கள் மற்றும் மத சம்பந்தப்பட்ட இடங்களை அரசு ஏன் நிர்வாகம் செய்து வருகிறது என்பது எனக்கு புரியவில்லை. அது ஏன் என விள்க்குவார்களா? தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோவில்களில் இருந்து பல சிலைகள் திருடப்பட்டுள்ளன. இவை மதம் தொடர்பானவை மட்டுமின்றி விலை மதிப்பற்றவை” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், “கேரளாவில் உள்ள சபரிமலை கோவில் திருவாங்கூர் தேவசம் குழுவினால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இதைப் போல் நாடெங்கும் பல கோவில்களை நிர்வாகம் செய்ய அரசு பல குழுக்களை அமைத்துள்ளது. ஒரு மதச் சார்பற்ற நாட்டில் அரசு எவ்வளவு தூரம் கோவில்களை நிர்வகிக்க முடியும்?” என கேட்டார்.

உச்சநீதிமன்ற அமர்வு பூரி ஜகன்னாதர் கோவிலில் உள்ள பூசாரிகள் ஏழை பக்தர்களை மிகவும் துன்புறுத்துவதாகவும் தெரிவித்தது. இது போல நடப்பது அங்கு வரும் படிப்பறிவு அற்ற ஏழைகளிடம் இவர்கள் கனிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் அமர்வு ஆலோசனை அளித்தது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.