புலம்பெயர் தொழிலாளர்களை சொந்தஊருக்கு உடனே அனுப்பி வையுங்கள்… உச்சநீதி மன்றம் கடும் எச்சரிக்கை

டெல்லி :
புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள், அவரவர்  சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அனைத்து மாநில அரசுகளும், உச்சநீதி மன்ற உத்தரவை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,   கூலித்தொழிலாளிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள்,  புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். வாழ்வதாரம் இழந்த அவர்களை  சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவிடக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் கடந்த   விசாரணையின்போது,  மத்திய அரசின் சார்பில் ஆஜராகி விளக்கம் அளிக்கப் பட்டது.  அப்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் ரயில் இயக்கப்படுவ தாகவும், அதன்மூலம்,  51லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 41 லட்சம் பேர் சாலை மார்க்கமாக சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதன் மூலம் 1 கோடி பேர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளைதாக தெரிவித்தார்.
இதையடுத்து  மீதமுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை,அடுத்த 15 நாட்களுக்குள் அவர்களின்  சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதி மன்றம் கடந்த 9ந்தேதி உத்தரவிட்டது.
ஆனால், இன்னும் பல மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்குவந்தது. விசாரணையைத் தொடர்ந்து, ஏற்கனவே கடந்த 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று எச்சரித்தது.
இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்த வேண்டும் என்றும்,  இடம்பெயரும் தொழிலாளர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பதையும் அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

You may have missed