ரஃபேல் ஒப்பந்த ஆவணங்களை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்! :  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

--

ஃபேல் ஒப்பந்த ஆவணங்களை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று   மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2015 ஆம் வருடம்   பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற போது,  ரஃபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் எதிர்கட்சிகள், ‘அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக இறுதி செய்யப்பட்டது’ என்று குற்றம் சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசும், ரிலையன்ஸ் குழுமமும் மறுத்திருக்கின்றன.

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. சென்ற முறை நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம், ‘மத்திய அரசு, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அப்படி சமர்பிக்கப்படும் ஆவணங்களில், விமானத்தின் விலை குறித்த விவரங்களை அளிக்க வேண்டாம்’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், ‘மூடப்பட்ட ஒரு கவரில், ரஃபேல் விமானங்கள் குறித்தான விலை குறித்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். 10 நாட்களுக்குள் இந்த விவரம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்’ என்று நீதிமன்ரம் தெரிவித்துள்ளது.

மேலும், ‘நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து அரசு விவரம் கொடுத்தால், அது குறித்து மனுதாரர்களுக்குத் தெரிவிக்கப்படாது. மனுதாரர்கள் எந்த அடிப்படையில் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது மற்றும் அதன் விலை குறித்தான தெளிவான தகவல்களை கேட்கின்றனர். பொதுத் தளத்தில் வெளியிடும் படியான ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் மத்திய அரசு தரப்பில், ‘தேர்தல் வர இருக்கும் நிலையில், அரசியல் காரணங்களுக்காக ரஃபேல் ஒப்பந்தம் குறித்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.